செவ்வாய், 15 செப்டம்பர், 2015

பக்தியும் - வழிபாடும்

                                   

^^^முற்காலத்தில் யூதர்கள் " சிலுவை " என்பதை பாவத்தின் சின்னமாக வைத்திருந்தார்கள்.. அதனாலேயே இயேசு கிறிஸ்துவைத் தண்டிக்க நினைக்கும்போது உச்சகட்ட அவமானமான சிலுவையில் அறைந்து கொல்வதற்கு முடிவெடுத்தார்கள்...!
 ஆனால் நடந்தது என்ன? எந்தகணம் கிறிஸ்து அந்தச் சிலுவையைத் தன் தோள்களில் தாங்கினாரோ, அந்த கணமே அந்த பாவச்சின்னம் புனிதச்சின்னமாக மாறிவிட்டதாக கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்...
 ^^^அதோடு விட்டுவிடாமல் சிலுவையை வணங்கவும், சிலுவையைத் தங்கள் மதக்குறியீடாகவும் ஏற்றுக்கொண்டார்கள்... இது ஒரு முழுமையான இறைநம்பிக்கையின் வெளிப்பாடு..!

எந்த மதத்தைப் பின்பற்றினாலும் , இறைவனை முழுமையாக ஏற்றுக்கொள்வதே உண்மையான பக்தி என்பது எனது கருத்து...!

*** புல்லாங்குழல் ஊதும் கண்ணன் படமோ, சிலையோ வீட்டில் வைக்கக்கூடாது..
*** ஐயப்பனை வீட்டில் வைத்து வணங்கக் கூடாது..
*** நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை வீட்டில் வைக்கக்கூடாது...
*** பசுவுடன் இருக்கும் கண்ணனை வீட்டில் வைக்கக்கூடாது...
*** அசுர சக்திகளை வதம் செய்த உக்கிர மூர்த்திகளான காளி, நரசிம்மர் போன்ற தெய்வங்களை வீட்டில் வைக்கக்கூடாது...

இவையெல்லாமே இந்து சமயத்தில் உள்ள பலர் சொல்லி நான் காதால் கேட்டவை...!

என்னைப்பொறுத்தவரை இதுபோன்ற கருத்துக்கள் எல்லாமே அப்பட்டமான மூடநம்பிக்கையின் வெளிப்பாடுதான்..!

இறைவன் இப்படித்தான் இருப்பார் என்றும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்ய நாம் யார்?

" ஆதியும் அந்தமுமாய் - அரூபியும் சொரூபியுமாய் " இருப்பவன்தானே இறைவன்,,! இறைவனை அப்படியே ஏற்றுக்கொள்வதுதானே உண்மையான பக்தியாக இருக்க முடியும்..

### புல்லாங்குழல்  உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்..ஆனால் கண்ணனுக்கு அதுதானே பிடித்திருக்கிறது.. இறைவனுக்குப் பிடித்த செயலை நீங்கள் எவ்வாறு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியும்?

### உட்கார்ந்து கொண்டிருக்கும்போது நல்லது செய்யும் பிள்ளையார் , எழுந்து நின்றால் தீமை செய்து விடுவாரா?

#### பெண்கள் வீட்டில் இருப்பதால் ஐயப்பனை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்கிறார்கள்.. ஆண், பெண் என்று பேதம் பார்த்து அருள்புரிபவரா ஐயப்பன்?

#### உக்கிரமான தெய்வங்களாக சொல்லப்படும் ( மனிதர்களால்) எல்லோரும் தீய சக்திகளைத்தானே வதம் செய்தார்கள்.. அவர்களை வீட்டில் வைத்து வணங்கினால் தீய சக்திகள் வீட்டிற்குள் இருக்க முடியாது..இது நல்ல விஷயம் தானே..!

பக்தி என்பது வேறு.! வழிபாடு என்பது வேறு..!
 வழிபாட்டு முறைகள் தான் பக்தி என்று தான் நிறையபேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..!
 வழிபாடு என்பது நம்முடைய திருப்திக்காக , சந்தோஷத்திற்காக, இன்னும் சொல்லப்போனால் நம்முடைய ஆடம்பரம், அந்தஸ்து,கௌரவத்தைப் பறைசாற்றுவதற்காக நாம் செய்து கொள்வது..!

*** வழிபாடு இல்லாத பக்தியால் இறைவனை அடையலாம்.. ஆனால் பக்தி இல்லாத வழிபாடுகளால் எந்தக்காலத்திலும் இறைவனை அடைய முடியாது...

 எந்தநிலையிலும் பக்தியைத் துறக்காது , " தான்" என்ற அகங்காரம் அழித்து , அனைத்தும் நீயே என்று முழுமையாய்ச் சரணாகதி அடைபவனே சிறந்த மனிதன்- உண்மையான பக்தன்.!

எப்போதும் இறைவனிடத்தில் சரணாகதி அடைந்திருப்போம்..!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.!                   சர்வம் சிவார்ப்பணம்.!