செவ்வாய், 8 டிசம்பர், 2015

மாமழை போற்றுதும் !

மூன்றில் இரு பங்காய் - உன்
முன்னே ஆர்ப்பரிக்கும் ஆழியாய்
அலையாடிடும் நானா,
பெருமழையாய்ப் பொழிந்துப்
பேரிடர்  தந்துவிடப் போகிறேன்?!

இப்பொழுது மட்டும் தானா
இறங்குகிறேன் வானின்று?
காலம் காலமாய்ப் பெய்துகொண்டு
தானே இருக்கிறேன்..!

என் வழக்கமும் மாறவில்லை..
என் வழியும் மாறவில்லை...!

என் வழியை நீ மாற்றினாய்-
நீயே மாட்டிக் கொண்டாய்..!

மாதம் மும்மாரி பெய்தபோது
போற்றினார்களே உன் முன்னோர்..!

வருடத்தில் சிலநாட்கள்
பெய்ததற்காய் வசைபாடுகிறாய் நீ..!!!

ஏரிகளை நீ ஆக்கிரமித்தாய் - உன்
வீடுகளில் நான் ஏறினேன்..!

கால்வாய்களை நீ அடைத்தாய் - உன்
காலடியில் நான் தேங்கினேன்..!

கண்மாய்களை நீ அடைத்தாய் - உன்
கட்டிடத்திற்குள் நான் நுழைந்தேன்..!

குளம், குட்டைகளை நீ மூடினாய் - உன்
குடியிருப்புகளில் நான் புகுந்தேன்..!

நீர் ஆதாரங்களை நிந்தித்தாய் - உன்
வாழ்வாதாரம் நிர்மூலம் ஆனது..!

இயற்கையைச் சீண்டினாய் - இன்று
இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டாய்..!

இது தண்ணீர் மழையா?
இல்லை; இல்லை !!!
விளைநிலங்களைக் கூறுபோட்டு
விவசாயியின் வயிற்றிலடித்தாயே -
அவர்களின் கண்ணீர் மழை..!!!

நீரின்றி அமையாது உலகு;
சோறின்றி அமையாது உன் வாழ்வு...

விவசாயத்தை முதன்மையாக்கு..!
விவசாயியை முன்னிறுத்து..!
நீர்நிலைகளைக் காப்பாற்று..!
உன் வாழ்வை நான் வளமாக்குவேன்...!

மகிழ்வுடன் நீயும் சொல்லலாம்
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " என்று....!!!