செவ்வாய், 8 டிசம்பர், 2015

வெள்ளம் - நல்லது

வீதிகளிலும் வீடுகளிலும்
தண்ணீர்!
விழிகளெல்லாம் கண்ணீர்!

வடிகால் இன்றி வந்தது
தண்ணீர் வெள்ளம்...
வருந்தி வருந்தி வந்தது
கண்ணீர் வெள்ளம்...

இத்தனை இழப்புகளிலும்;
இத்தனை அவலங்களிலும்
இயங்குகிறோம் நாங்கள் -
இன்னுமொரு வெள்ளத்தால்...

அது மக்களின்
அன்பு வெள்ளம்..!
கருணை வெள்ளம்..!!
மனிதநேய வெள்ளம்..!!!

மனிதம் போற்றுவோம்..!
மானிடம் காப்போம்..!!!

மாமழை போற்றுதும் !

மூன்றில் இரு பங்காய் - உன்
முன்னே ஆர்ப்பரிக்கும் ஆழியாய்
அலையாடிடும் நானா,
பெருமழையாய்ப் பொழிந்துப்
பேரிடர்  தந்துவிடப் போகிறேன்?!

இப்பொழுது மட்டும் தானா
இறங்குகிறேன் வானின்று?
காலம் காலமாய்ப் பெய்துகொண்டு
தானே இருக்கிறேன்..!

என் வழக்கமும் மாறவில்லை..
என் வழியும் மாறவில்லை...!

என் வழியை நீ மாற்றினாய்-
நீயே மாட்டிக் கொண்டாய்..!

மாதம் மும்மாரி பெய்தபோது
போற்றினார்களே உன் முன்னோர்..!

வருடத்தில் சிலநாட்கள்
பெய்ததற்காய் வசைபாடுகிறாய் நீ..!!!

ஏரிகளை நீ ஆக்கிரமித்தாய் - உன்
வீடுகளில் நான் ஏறினேன்..!

கால்வாய்களை நீ அடைத்தாய் - உன்
காலடியில் நான் தேங்கினேன்..!

கண்மாய்களை நீ அடைத்தாய் - உன்
கட்டிடத்திற்குள் நான் நுழைந்தேன்..!

குளம், குட்டைகளை நீ மூடினாய் - உன்
குடியிருப்புகளில் நான் புகுந்தேன்..!

நீர் ஆதாரங்களை நிந்தித்தாய் - உன்
வாழ்வாதாரம் நிர்மூலம் ஆனது..!

இயற்கையைச் சீண்டினாய் - இன்று
இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டாய்..!

இது தண்ணீர் மழையா?
இல்லை; இல்லை !!!
விளைநிலங்களைக் கூறுபோட்டு
விவசாயியின் வயிற்றிலடித்தாயே -
அவர்களின் கண்ணீர் மழை..!!!

நீரின்றி அமையாது உலகு;
சோறின்றி அமையாது உன் வாழ்வு...

விவசாயத்தை முதன்மையாக்கு..!
விவசாயியை முன்னிறுத்து..!
நீர்நிலைகளைக் காப்பாற்று..!
உன் வாழ்வை நான் வளமாக்குவேன்...!

மகிழ்வுடன் நீயும் சொல்லலாம்
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " என்று....!!!










சனி, 7 நவம்பர், 2015

தித்திக்கும் தீபாவளி!!!

நண்பர்களாகிய சொந்தங்களுக்கும், சொந்தங்களாகிய நண்பர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்..!

தித்திக்கும் இத்தீபாவளி,
எத்திக்கும் பரப்பட்டும்
மத்தாப்பாய் மகிழ்ச்சியை...

புத்தாடை அணிந்து,
பத்திரமாய்ப் பட்டாசு
வெடித்திட உதவட்டும்..!

முத்திரைப் பதிக்கும்
முத்தாய்ப்பான நிகழ்வுகள்
சித்திரமாய் மனதில்
சிறப்புடனே தங்கட்டும்..!

பலகார இனிப்புகளும்,
குலாவிடும் உறவுகளும்,
சிலாகிக்கும் சொந்த ஊரும்,
விலைமதிப்பில்லா நட்புகளும்

என்றும் நம்மை
அலைபோல் அணைக்கட்டும்!
நெஞ்சில்
சிலைபோல் நிலைக்கட்டும்!
வாழ்வில்
கலைபோல் சுவைக்கட்டும்!
வானுயர்ந்த
மலைபோல் பாதுகாக்கட்டும்!

முத்தான  பழைமை முறைகளும்,
முன்னோர் வாழ்ந்துகாட்டிய நெறிகளும்,
தமிழ்க் கலாச்சாரப் புதையல்களும்,
ஏரோட்டும் உழவனும்
நீர்தரும் நதிகளும்
சீர்படுத்தட்டும் நம்மை!

பட்டாசுக் குப்பை போல
ஒதுக்கிடுவோம் மேற்கத்திய மோகத்தை..!

தீபத்தின் ஒளியாய்ப் பாதுகாத்துப்
பரப்பிடுவோம் நம்
தாய்த்தமிழ்ப் பண்பாட்டினை..!

தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்..!

வெள்ளி, 30 அக்டோபர், 2015

அன்புச்  சகோதரனே !
எங்கள் சின்னக் கலைவாணரே !

பூமித்தாய்க்கு இயற்கை ஆடை உடுத்த
ஊரெங்கும் மரக்கன்றுகள் நட்டாய் - இன்றோ
உன் குலக்கன்று பட்டுபோனதே - இப்பாரம்
எவ்விதம் சுமப்பாய்?

பதின்ம வயதுப் பாலகனின் இழப்பை
எதைக்கொண்டு ஈடுசெய்யப் போகிறான் இறைவன்?

எம் ஆறுதல் வார்த்தைகள் அழித்திடுமா
உன் கண்ணீர்க் கறைகளை?!

இழப்பின் வேதனையை நீ
இறக்கி வைக்க ஓர் இடமளிக்க
இயலாமல் இரங்குகிறோம்...

விண்ணுலகம் சென்ற உன்
செல்ல மகனைத் தன்
கண்ணைப்போல் பார்த்துக்கொள்வார்
உன் குருநாதர் ஐயா அப்துல் கலாம் !!!

கலங்கிய நெஞ்சுக்குக் கடிவாளமிட்டுச்
சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்..!

உன் மூன்றாவது கண்ணை
முறையின்றிப் பறித்திட்ட
மரணத்தைச் சபிக்கின்றோம் ...

சகோதரர் விவேக் அவர்களின் மகனுடைய ஆத்மா இறைவன் இணையடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்...!

வியாழன், 8 அக்டோபர், 2015

உன் மௌனத்தால்
சிறைப்பிடிக்கப்பட்ட
வார்த்தைகள் எல்லாம்,
விழிவழியே வெளியேறத்
துடிக்கின்றன...
பாவம் அவை;
விடுதலை அளித்துவிடு- உன்
வாய் திறந்து..!

புதன், 7 அக்டோபர், 2015

ஓ(கா)வியக் காதல்!

     
காணும்  பொழுதெல்லாம்  உனைக்
கண்களில்  நிறைத்தேன்...
காணாப் பொழுதுகளை  எல்லாம்
கல்லாய்ப் போகச்  சபித்தேன்...

கண்ணும்  கண்ணும் கலந்து - நம்
எண்ணம்  ஒன்றாய்ச்  சமைந்து - ஒளி
வண்ணச் சிதறல்  ஓவியமாய்க்  காதல்
கிண்ணத்தில்  குழைவோம்  வா !!!

முழுநிலவில் முகிழ்த்த காதல்
முன்பனிச் சாரலில் நனைய -
மூடுபனிக் காவியம் ஒன்றைத்
தேடும் பணி  செய்வோம்  வா!!!





செவ்வாய், 15 செப்டம்பர், 2015

பக்தியும் - வழிபாடும்

                                   

^^^முற்காலத்தில் யூதர்கள் " சிலுவை " என்பதை பாவத்தின் சின்னமாக வைத்திருந்தார்கள்.. அதனாலேயே இயேசு கிறிஸ்துவைத் தண்டிக்க நினைக்கும்போது உச்சகட்ட அவமானமான சிலுவையில் அறைந்து கொல்வதற்கு முடிவெடுத்தார்கள்...!
 ஆனால் நடந்தது என்ன? எந்தகணம் கிறிஸ்து அந்தச் சிலுவையைத் தன் தோள்களில் தாங்கினாரோ, அந்த கணமே அந்த பாவச்சின்னம் புனிதச்சின்னமாக மாறிவிட்டதாக கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்...
 ^^^அதோடு விட்டுவிடாமல் சிலுவையை வணங்கவும், சிலுவையைத் தங்கள் மதக்குறியீடாகவும் ஏற்றுக்கொண்டார்கள்... இது ஒரு முழுமையான இறைநம்பிக்கையின் வெளிப்பாடு..!

எந்த மதத்தைப் பின்பற்றினாலும் , இறைவனை முழுமையாக ஏற்றுக்கொள்வதே உண்மையான பக்தி என்பது எனது கருத்து...!

*** புல்லாங்குழல் ஊதும் கண்ணன் படமோ, சிலையோ வீட்டில் வைக்கக்கூடாது..
*** ஐயப்பனை வீட்டில் வைத்து வணங்கக் கூடாது..
*** நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை வீட்டில் வைக்கக்கூடாது...
*** பசுவுடன் இருக்கும் கண்ணனை வீட்டில் வைக்கக்கூடாது...
*** அசுர சக்திகளை வதம் செய்த உக்கிர மூர்த்திகளான காளி, நரசிம்மர் போன்ற தெய்வங்களை வீட்டில் வைக்கக்கூடாது...

இவையெல்லாமே இந்து சமயத்தில் உள்ள பலர் சொல்லி நான் காதால் கேட்டவை...!

என்னைப்பொறுத்தவரை இதுபோன்ற கருத்துக்கள் எல்லாமே அப்பட்டமான மூடநம்பிக்கையின் வெளிப்பாடுதான்..!

இறைவன் இப்படித்தான் இருப்பார் என்றும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்ய நாம் யார்?

" ஆதியும் அந்தமுமாய் - அரூபியும் சொரூபியுமாய் " இருப்பவன்தானே இறைவன்,,! இறைவனை அப்படியே ஏற்றுக்கொள்வதுதானே உண்மையான பக்தியாக இருக்க முடியும்..

### புல்லாங்குழல்  உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்..ஆனால் கண்ணனுக்கு அதுதானே பிடித்திருக்கிறது.. இறைவனுக்குப் பிடித்த செயலை நீங்கள் எவ்வாறு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியும்?

### உட்கார்ந்து கொண்டிருக்கும்போது நல்லது செய்யும் பிள்ளையார் , எழுந்து நின்றால் தீமை செய்து விடுவாரா?

#### பெண்கள் வீட்டில் இருப்பதால் ஐயப்பனை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்கிறார்கள்.. ஆண், பெண் என்று பேதம் பார்த்து அருள்புரிபவரா ஐயப்பன்?

#### உக்கிரமான தெய்வங்களாக சொல்லப்படும் ( மனிதர்களால்) எல்லோரும் தீய சக்திகளைத்தானே வதம் செய்தார்கள்.. அவர்களை வீட்டில் வைத்து வணங்கினால் தீய சக்திகள் வீட்டிற்குள் இருக்க முடியாது..இது நல்ல விஷயம் தானே..!

பக்தி என்பது வேறு.! வழிபாடு என்பது வேறு..!
 வழிபாட்டு முறைகள் தான் பக்தி என்று தான் நிறையபேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..!
 வழிபாடு என்பது நம்முடைய திருப்திக்காக , சந்தோஷத்திற்காக, இன்னும் சொல்லப்போனால் நம்முடைய ஆடம்பரம், அந்தஸ்து,கௌரவத்தைப் பறைசாற்றுவதற்காக நாம் செய்து கொள்வது..!

*** வழிபாடு இல்லாத பக்தியால் இறைவனை அடையலாம்.. ஆனால் பக்தி இல்லாத வழிபாடுகளால் எந்தக்காலத்திலும் இறைவனை அடைய முடியாது...

 எந்தநிலையிலும் பக்தியைத் துறக்காது , " தான்" என்ற அகங்காரம் அழித்து , அனைத்தும் நீயே என்று முழுமையாய்ச் சரணாகதி அடைபவனே சிறந்த மனிதன்- உண்மையான பக்தன்.!

எப்போதும் இறைவனிடத்தில் சரணாகதி அடைந்திருப்போம்..!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.!                   சர்வம் சிவார்ப்பணம்.!

அன்பின் சீதனம் அவள் - என்றும் 
ஆறுதலுக்கு இனியவள்...
இறைபக்தியில் இமயம் அவள்;
ஈகையின் மறு பிம்பம் அவள்...
உபசரிப்பில் உச்சமாய் நின்று - என்றும்
ஊர்போற்றும் தெய்வம் அவள்...

முற்பிறவியில் யாம்செய்த தவத்தால்
இப்பிறவியில் எமக்கு
அன்னையாய் இறைவன் கொடுத்த
ஆகாய கங்கை அவள்...

பொறுமையின் எல்லை அவள்..
பொறாமையின் எதிரி அவள்..
எல்லோருக்கும் எப்போதும்
இன்முகம் காட்டி நிறைவாய்
இன்னமுது அளிக்கும் - எம்
எல்லைக்காவல் தெய்வம் அவள்...

சீனியும் சர்க்கரையும் இனிக்கவில்லை -
சீனியம்மாவின் அன்பின் முன்னால்..!

அன்பு அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!


                            என்னை ஈன்ற தாயைப்போலவே பாசம் காட்டும் இன்னொரு தாய்; போன ஜென்மத்தில் நீ என் வயிற்றில் தான் பிறந்திருப்பாய் என்று அடிக்கடிச் சொல்லி ஆனந்தம் கொள்ளும் அம்மா - சீனியம்மாள் அம்மாவுக்காக எழுதியது... (ஏப்ரல் 3,2015).
உன்னுடன் பிறக்கவில்லை,
உதிரச் சொந்தம் நமக்குள் இல்லை.
உயிரான உடன்பிறப்பாய் நம்மை 
உருவாக்கியது நம் உன்னத அன்பு...

மகுடிக்கு மயங்கிடும் அரவம் போல-
"தம்பி" எனும் உறவினில் 
மயங்கிடும் அக்கா நான்...

என்னுள் புதைந்து இருக்கும்
பாசத்தின் பாரத்தினை - இந்த
எழுத்துகளால் சுமக்க இயலாது...

சொற்களில் அடைத்திட முடியாத நம்
சொந்தம் தொடரட்டும் என்றென்றும் ..

வருடம் ஒவ்வொன்றும் உனக்கு
வளமாய் அமையட்டும்...

நிறைவான செல்வங்களும்,
நிம்மதியான இன்பங்களும்,
அன்பான உறவுகளும்,
ஆண்டவனின் அருளும்
ஆழியாய்ச் சூழ்ந்திருக்கட்டும்
எப்போதும் உன்னை...!

அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!!!


                                              அன்புத்தம்பி நரேனுக்காக -  ஜனவரி 29, 2015-ல் எழுதியது..
ஒரு வாழ்த்துச் சொல்ல வேண்டும்...
ஆனால் வார்த்தைகள் தான் சிக்கமாட்டேன் என்கிறது...

என்ன எழுதுவது?
என்னென்னவோ எழுதலாம்..
எண்ணமனைத்தையும் எழுதலாம்...
எழுத்துக்களை ஒவ்வொன்றாய்க் கோர்த்து 
எழுதிவிடலாம் தான்...

எழுத்துக்களும் என்னிடம்
கண்ணாமூச்சி ஆடினால் - அடியேன்
என்னதான் செய்வது?

உனது நட்பால் உருவானது
நம் உறவு..
இன்றுவரை நம் பாசத்தில்
இருந்ததில்லை சரிவு..

சோகத்தில் நான்
தொய்வடைந்த தருணங்களில்
சோதரனாய் நீ தோள் கொடுத்தாய்..

ஆறுதலாய் நீ சொன்ன
அந்நேரத்து வார்த்தைகள் - என்
ஆயுள் நீடிக்க உதவிய
அமிர்த மாத்திரைகள் ...!

ஓர் வயிற்றில்
பிறந்தால் தான் தம்பியா?
மாற்றிக் காட்டினாய் - உன்
மாற்றுக்குறையாப் பாசத்தினால்..

சிவா மூலம் கிடைத்த
இந்த உறவு - என்
சீவன் உள்ளவரை நிலைக்கட்டும்...

சீரான வாழ்வும்,
சிறப்பான நிகழ்வுகளும்,
மகிழ்வான தருணங்களும்,
நெகிழ்வான நினைவுகளும்,

மனநிறைவும், மனமகிழ்வும் கொண்டு
வெற்றிப்பாதையில் வீறுநடை போட
வாழ்த்துகிறேன்....

அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! 


                                               அன்புத்தம்பி சரவணனுக்காக - மார்ச் 12,2015-ல் எழுதியது..
இயக்குனர் சிகரத்திற்கு எனது சிறு காணிக்கை.....
இயக்குனர் சிகரம் ! - தான்
இயக்கியவர்களை எல்லாம்
சிகரத்தில் ஏற்றிய மாமேதை..
புதுமைப்பெண்களைப் படைத்ததில்
திரையுலக பாரதி...
நன்னிலத்தில் விளைந்த
திரைக் கற்பக விருட்சம்...
அசர வைக்கும் கதாபாத்திரங்களை
அநாயாசமாகக் கையாண்ட
அசகாய சூரர்...
எல்லோரின் மரணமும் - அது
எதிரியேயாயினும்
நம் மனதைச் சற்றே அசைக்கும் ;
ஒரு சிலரின் மரணம் மட்டுமே
உயிரின் வேர்வரைச் சென்று உலுக்கும்.!
நடிகர் திலகம் திரு.சிவாஜி,
நகைச்சுவை மன்னர் திரு.நாகேஷ்,
திரு.நம்பியார், திருமதி.சுஜாதா,
திரு.மணிவண்ணன், திரு.முரளி,
வாலிபக் கவிஞர் வாலி -
இவர்களின் வரிசையில்
இழக்க முடியாத, இன்னும்
நம்ப முடியாத, இம்மியளவும்
ஏற்க முடியாத மரணச் செய்தி-
இயக்குனர் சிகரத்தின் மரணச் செய்தி...
வயோதிகத்தின் முடிவுரை மரணம் என்றும்,
மாண்டவர் ஒருபோதும் மீண்டதில்லை என்றும்
பகுத்தறியும் பக்குவம் இருந்தாலும்
பாழும் மனது கேட்பதில்லை;
பரிதவிக்கத்தான் செய்கிறது ...
இறைவனின் இணையடி நிழலில்
இளைப்பாறச் சென்றிருக்கும்
அன்னாரது ஆத்மா -
அமைதியில் நிலைத்திட
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் !!!

                                                        டிசம்பர் 24,2014-ல் எழுதியது...

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015



உடன்பிறப்பே..
உயிர்மூலத்தின் மறுபதிப்பே...
உனக்காக செலவு செய்யும்
நேசம் அத்தனையும் 
உடனுக்குடன் சேமிப்பில்
இரட்டிப்பாகிறதே எப்படி.?!
உனக்கான நேசத்தைச் சுமப்பதில் - என்றுமே
நிறைமாத கர்ப்பிணி நான்..!
உனக்காக ஒரு கவிதை எழுதிட
எத்தனித்து எத்தனித்து ஏமாந்ததுண்டு –
ஏனென்று யோசித்ததில் தெரிந்தது -
மொழிகளில் வடிக்க இயலாத
உயிர்க்கவிதை நீ என்று...
அம்மாவும் அப்பாவும் -
உனக்கும் எனக்கும்
பாசத்தைப் பங்கிட்டார்கள்...
பங்கீடு செய்யும் நிலைமை
எனக்கு இல்லை..
மொத்தப் பாசத்தையும்
முழுதாய்க் காட்டிடச்
சித்தமானேன் நான் இறையருளால்...
அண்டத்திற்கு ஒரு சூரியன் போல,
அகிலத்திற்கு ஒரு நிலவு போல;
வாழைக்கு ஒரு குலை போல,
வள்ளுவனின் ஒரு நூலைப் போல;
திலகவதிக்கு ஒரு அப்பர் போல,
குந்தவைக்கு ஒரு அருண்மொழி போல-
பிரபாவுக்கு ஒரு பிரகலாதன்.
என்றும் என் அன்புத் தம்பி நீ...
எங்கள் மூவரின் செல்லப்பிள்ளை நீ..
இம்மியளவும் குறையாத
எங்கள் பாசம் -
இன்னும் பல்கிப் பெருகி -எம்
இதயக்கிடங்கில் காத்திருக்கிறது-
பிரகலாதனின் பிள்ளைக்காய்...
உன்னைவிட இன்னும் உயர்வாய்,
அன்னையிடம் சீராட்டும்,
அப்பாவின் பாராட்டும் - இந்த
அத்தை மடித் தாலாட்டும்
உன் மக்கள் கண்டு
உன் குலம் தழைத்திட ,
உயர்ந்து செழித்திட,
நிறைவும் நிம்மதியும் கொண்டு
நீடூழி நீ வாழ வாழ்த்துகிறேன்...
வாழ்க பல்லாண்டு..
வாழ்க நலமுடன்...
வாழ்க வளமுடன்...
அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....!!!

                                                       பெப்ரவரி 15,2015-இல் எழுதியது..
அப்துல் கலாம்...!
அப்பழுக்கற்ற சிந்தனைகள்..
ஆரவாரமில்லாத சாதனைகள்..
வெள்ளைத் தலையும் ,
பிள்ளைச் சிரிப்பும் - உன் 
பிரத்தியேக அடையாளங்கள்..!
எங்கள் மனங்களில் நீ
கனவுகள் விதைத்தாய்...
இந்திய மண்ணிலெங்கும்
பசுமையினை விளைவித்தாய்...!
ஐந்தாண்டுகாலம் 'முதல்குடிமகன்'-
பதவி உன்னை அலங்கரிக்கவில்லை..
உன்னால் அப்பதவி அலங்கரிக்கப்பட்டது...!
ராமேஸ்வரம் தந்த மாமனிதன்...
ராஷ்ட்ரபதி பவன் கண்ட மாமேதை...!
மதம் விடுத்து மனிதம் போற்றினாய்..
மக்கள் மனதில் நிலையாய் நிறைந்தாய்..
உயரிய பதவிகள் பல வகித்தாய்..
உண்மையின் உருவாய் நீ சொலித்தாய்..!
எண்ணும் எழுத்தும் கண்ணாய்ப் போற்றினாய்..
எதிர்மறை எண்ணங்களைத் தூற்றினாய்..
தமிழார்ந்த சான்றோனாய்த்
தரணியெங்கும் புகழ்படைத்தாய்..!
மாணவர்களுக்கு உற்சாகமூட்டினாய் - அவர்தம்
மனதில் நற்சிந்தனைத் தீமூட்டினாய்..
இளைஞர்களுக்கு எழுச்சியூட்டினாய்..
இந்தியாவிற்கு நல்வழி காட்டினாய்...!
அறிவியலும் ஆராய்ச்சியும் உனது துறை..
ஆசிரியப்பணியோ உனது மறை..
புன்னகையே உனது உறை - உன்னிடம்
புறமுதுகு காட்டி ஓடியது அரசியல் கறை..
பள்ளிச்சிறார்களுக்கு உனது மனம்
இன்பச்சிறை...
பாரத தேசத்திற்கு நீ செலுத்தினாய்
பாசத்திறை...
நிறைகுடமே தளும்பாது - நீயோ
நிறைகடல் - தளும்புவதேது..!
தாய்த்தமிழ்த் திருநாட்டில்--
எம் பெற்றோர்க் காலத்தில்
கர்மவீரர் காமராசர்...!
எம் காலத்தில் எங்கள்
கனவுகளின் நாயகன் 'கலாம்'..!
அக்னி நாயகன் ' அப்துல் கலாம்'..!
ஏவுகணை நாயகன் ' ஏ.பி.ஜே.அப்துல் கலாம்'..!
அவர் நினைவுகள் நிரந்தரமானவை- அழிவதில்லை...
எங்கள் மனங்களில் அவருக்கு மரணமில்லை..!!!
வாழ்க நின்புகழ்!!! வளர்கிறோம் நின்வழியில்!!!
பெருமதிப்பிற்குரிய மாமனிதர், பாரத ரத்னா Dr.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு- ஒரு தமிழ்மாணவியாக எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்..

                                                                           ஜூலை 29,2015-ல் எழுதியது..

முகநூல் பதிவுகள்

தன்னம்பிக்கையூட்டித் தட்டிக் கொடுக்கவும்;
தவறு செய்தால் தட்டிக் கேட்கவும்;
தடுமாறும்போது தாங்கிப் பிடிக்கவும் - ஒரு
தன்னலமில்லாத உறவு அமைந்து விட்டால்
தரணியையே வென்று விடலாம் நாம்..!!!

                                             செப்டம்பர் 10,2015இல் எழுதியது..