வெள்ளி, 8 ஏப்ரல், 2016

ஆருயிர்த்தோழன் சரோ-க்கு , இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!

அன்புத் தோழனே...
பிறப்பினைப் பெருமைப்படுத்த - நேர்மை
சிறப்புகள் பல செய்து; எதிர்மறை
துறப்புகள் யாவும் கொண்டு- ஞானத்
திறப்புகள் பல பெற்று;

உறவுகள் உனைக் கொண்டாட- உவகைத்
திறவுகோல் உன்னில் தந்தாட,
அறவழியில் பயணம் நடைபோட
சூறாவழியாய் இன்பம் சூழ்ந்தாட;

மகிழ்ச்சியில் திளைத்திட,
மனிதத்தில் நிறைந்திட,
உண்மையில் உறைந்திட,
உலகினில் உயர்ந்திட;

நிம்மதி பொங்கிட,
நிகழ்காலம் பொலிவுற,
வருங்காலம் வளமாக,
வசந்தம் நிரந்தரமாய் -உன்
வாழ்வில் குடிகொள்ள வாழ்த்துகள்..!

வாழ்க வளமுடனும் நலமுடனும்..!
வாழ்க பல்லாண்டு..!!!



செவ்வாய், 8 டிசம்பர், 2015

வெள்ளம் - நல்லது

வீதிகளிலும் வீடுகளிலும்
தண்ணீர்!
விழிகளெல்லாம் கண்ணீர்!

வடிகால் இன்றி வந்தது
தண்ணீர் வெள்ளம்...
வருந்தி வருந்தி வந்தது
கண்ணீர் வெள்ளம்...

இத்தனை இழப்புகளிலும்;
இத்தனை அவலங்களிலும்
இயங்குகிறோம் நாங்கள் -
இன்னுமொரு வெள்ளத்தால்...

அது மக்களின்
அன்பு வெள்ளம்..!
கருணை வெள்ளம்..!!
மனிதநேய வெள்ளம்..!!!

மனிதம் போற்றுவோம்..!
மானிடம் காப்போம்..!!!

மாமழை போற்றுதும் !

மூன்றில் இரு பங்காய் - உன்
முன்னே ஆர்ப்பரிக்கும் ஆழியாய்
அலையாடிடும் நானா,
பெருமழையாய்ப் பொழிந்துப்
பேரிடர்  தந்துவிடப் போகிறேன்?!

இப்பொழுது மட்டும் தானா
இறங்குகிறேன் வானின்று?
காலம் காலமாய்ப் பெய்துகொண்டு
தானே இருக்கிறேன்..!

என் வழக்கமும் மாறவில்லை..
என் வழியும் மாறவில்லை...!

என் வழியை நீ மாற்றினாய்-
நீயே மாட்டிக் கொண்டாய்..!

மாதம் மும்மாரி பெய்தபோது
போற்றினார்களே உன் முன்னோர்..!

வருடத்தில் சிலநாட்கள்
பெய்ததற்காய் வசைபாடுகிறாய் நீ..!!!

ஏரிகளை நீ ஆக்கிரமித்தாய் - உன்
வீடுகளில் நான் ஏறினேன்..!

கால்வாய்களை நீ அடைத்தாய் - உன்
காலடியில் நான் தேங்கினேன்..!

கண்மாய்களை நீ அடைத்தாய் - உன்
கட்டிடத்திற்குள் நான் நுழைந்தேன்..!

குளம், குட்டைகளை நீ மூடினாய் - உன்
குடியிருப்புகளில் நான் புகுந்தேன்..!

நீர் ஆதாரங்களை நிந்தித்தாய் - உன்
வாழ்வாதாரம் நிர்மூலம் ஆனது..!

இயற்கையைச் சீண்டினாய் - இன்று
இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டாய்..!

இது தண்ணீர் மழையா?
இல்லை; இல்லை !!!
விளைநிலங்களைக் கூறுபோட்டு
விவசாயியின் வயிற்றிலடித்தாயே -
அவர்களின் கண்ணீர் மழை..!!!

நீரின்றி அமையாது உலகு;
சோறின்றி அமையாது உன் வாழ்வு...

விவசாயத்தை முதன்மையாக்கு..!
விவசாயியை முன்னிறுத்து..!
நீர்நிலைகளைக் காப்பாற்று..!
உன் வாழ்வை நான் வளமாக்குவேன்...!

மகிழ்வுடன் நீயும் சொல்லலாம்
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " என்று....!!!










சனி, 7 நவம்பர், 2015

தித்திக்கும் தீபாவளி!!!

நண்பர்களாகிய சொந்தங்களுக்கும், சொந்தங்களாகிய நண்பர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்..!

தித்திக்கும் இத்தீபாவளி,
எத்திக்கும் பரப்பட்டும்
மத்தாப்பாய் மகிழ்ச்சியை...

புத்தாடை அணிந்து,
பத்திரமாய்ப் பட்டாசு
வெடித்திட உதவட்டும்..!

முத்திரைப் பதிக்கும்
முத்தாய்ப்பான நிகழ்வுகள்
சித்திரமாய் மனதில்
சிறப்புடனே தங்கட்டும்..!

பலகார இனிப்புகளும்,
குலாவிடும் உறவுகளும்,
சிலாகிக்கும் சொந்த ஊரும்,
விலைமதிப்பில்லா நட்புகளும்

என்றும் நம்மை
அலைபோல் அணைக்கட்டும்!
நெஞ்சில்
சிலைபோல் நிலைக்கட்டும்!
வாழ்வில்
கலைபோல் சுவைக்கட்டும்!
வானுயர்ந்த
மலைபோல் பாதுகாக்கட்டும்!

முத்தான  பழைமை முறைகளும்,
முன்னோர் வாழ்ந்துகாட்டிய நெறிகளும்,
தமிழ்க் கலாச்சாரப் புதையல்களும்,
ஏரோட்டும் உழவனும்
நீர்தரும் நதிகளும்
சீர்படுத்தட்டும் நம்மை!

பட்டாசுக் குப்பை போல
ஒதுக்கிடுவோம் மேற்கத்திய மோகத்தை..!

தீபத்தின் ஒளியாய்ப் பாதுகாத்துப்
பரப்பிடுவோம் நம்
தாய்த்தமிழ்ப் பண்பாட்டினை..!

தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்..!

வெள்ளி, 30 அக்டோபர், 2015

அன்புச்  சகோதரனே !
எங்கள் சின்னக் கலைவாணரே !

பூமித்தாய்க்கு இயற்கை ஆடை உடுத்த
ஊரெங்கும் மரக்கன்றுகள் நட்டாய் - இன்றோ
உன் குலக்கன்று பட்டுபோனதே - இப்பாரம்
எவ்விதம் சுமப்பாய்?

பதின்ம வயதுப் பாலகனின் இழப்பை
எதைக்கொண்டு ஈடுசெய்யப் போகிறான் இறைவன்?

எம் ஆறுதல் வார்த்தைகள் அழித்திடுமா
உன் கண்ணீர்க் கறைகளை?!

இழப்பின் வேதனையை நீ
இறக்கி வைக்க ஓர் இடமளிக்க
இயலாமல் இரங்குகிறோம்...

விண்ணுலகம் சென்ற உன்
செல்ல மகனைத் தன்
கண்ணைப்போல் பார்த்துக்கொள்வார்
உன் குருநாதர் ஐயா அப்துல் கலாம் !!!

கலங்கிய நெஞ்சுக்குக் கடிவாளமிட்டுச்
சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்..!

உன் மூன்றாவது கண்ணை
முறையின்றிப் பறித்திட்ட
மரணத்தைச் சபிக்கின்றோம் ...

சகோதரர் விவேக் அவர்களின் மகனுடைய ஆத்மா இறைவன் இணையடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்...!

வியாழன், 8 அக்டோபர், 2015

உன் மௌனத்தால்
சிறைப்பிடிக்கப்பட்ட
வார்த்தைகள் எல்லாம்,
விழிவழியே வெளியேறத்
துடிக்கின்றன...
பாவம் அவை;
விடுதலை அளித்துவிடு- உன்
வாய் திறந்து..!

புதன், 7 அக்டோபர், 2015

ஓ(கா)வியக் காதல்!

     
காணும்  பொழுதெல்லாம்  உனைக்
கண்களில்  நிறைத்தேன்...
காணாப் பொழுதுகளை  எல்லாம்
கல்லாய்ப் போகச்  சபித்தேன்...

கண்ணும்  கண்ணும் கலந்து - நம்
எண்ணம்  ஒன்றாய்ச்  சமைந்து - ஒளி
வண்ணச் சிதறல்  ஓவியமாய்க்  காதல்
கிண்ணத்தில்  குழைவோம்  வா !!!

முழுநிலவில் முகிழ்த்த காதல்
முன்பனிச் சாரலில் நனைய -
மூடுபனிக் காவியம் ஒன்றைத்
தேடும் பணி  செய்வோம்  வா!!!